தொழிற்சங்க நடவடிக்கையைத் தீவிரப்படுத்த நடவடிக்கை – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி முதல் தீவிரப்படுத்தப்படுத்தவுள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு, தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை வழங்கத் தவறியுள்ளதால், போராட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் 2 ஆம் திகதி காலை 8 மணி முதல் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்போது, மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லாத மருந்துகள் மற்றும் உபகரணங்களை வெளியிலிருந்து பெற்றுக்கொள்ளுமாறு நோயாளர்களுக்குப் பரிந்துரைத்து மருந்துச் சீட்டுகளை வழங்குவது நிறுத்தப்படவுள்ளது.
மருத்துவமனைகளில் மேற்கொள்ள முடியாத ஆய்வகப் பரிசோதனைகளை வெளியில் செய்துகொள்ளுமாறு பரிந்துரைப்பது நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார முகாம்கள் மற்றும் கிளினிக்குகளில் மருத்துவர்கள் தன்னார்வமாகக் கலந்துகொள்வதிலிருந்து விலகுவார்கள் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையில், மருத்துவமனைகளில் புதிதாகத் திறக்கப்படும் அறைகள் அல்லது பிரிவுகளுக்கு மருத்துவர்கள் இணைப்பது நிறுத்தப்படவுள்ளது.
