யாழில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு செல்லவுள்ள பொலிஸாரின் பிரச்சினை

-யாழ் நிருபர்-

வீதி கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுமகனால் குற்றச்சாட்டப்பட்டது. அந்த விடயத்தை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் என நாடாளுமன்ற உறுப்பினரும் வலி மேற்கு அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சிறீ பவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

வலிகாமம் மேற்கு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்று வெள்ளிக்கிழமை அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஸ்ரீபவானந்தாராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது குறித்த விடயம் பேசப்பட்டது.

குறித்த பொதுமகன் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இரவு கடமையில் ஈடுபடும் பொலிஸார் சாரதிகளின் கண்களில் வெளிச்சத்தை பாய்ச்சி வாகனங்களை மறிக்கின்றனர். அத்துடன் பொலிஸார் தமது வாகனங்களின் நிறுத்தல் விளக்குகளை ஒளிரவிடாமல் இருட்டில் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஆகவே இதனை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர்,

குறித்த விடயத்தை நானும் அவதானித்துள்ளேன். இதனை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் கவனத்திற்கு எழுத்து மூலம் கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்றார்.