நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? – த.வெ.க தலைவர் விஜய் கேள்வி!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், இந்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் நிலையில், அரசியலில் நுழைந்த பின்னர் முதன்முறையாக இந்தியாவின் தேசிய ஊடகமான NDTVக்கு நேற்று வெள்ளிக்கிழமை பிரத்தியேக நேர்காணல் ஒன்றை அளித்துள்ளார்.
கரூர் நெரிசல் சம்பவம் தனக்கு ஒரு பேரதிர்ச்சியாக அமைந்ததாகவும், அது இன்னும் தன்னை ஏதோ ஒரு வகையில் பாதிப்பதாகவும் விஜய் கூறியதாக விஜய்யுடனான நேர்காணலை தொடர்ந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தனது ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு இன்னும் அனுமதி கிடைக்காததால், அதனால் பாதிக்கப்பட்டுள்ள தனது தயாரிப்பாளருக்காக வருந்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் வருகையால் படம் குறிவைக்கப்படலாம் என்பதை முன்கூட்டியே எதிர்பார்த்ததாகவும், அதற்கு மனதளவில் தயாராக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலில், தன்னை ஒரு ‘கிங்மேக்கர்’ (Kingmaker) என்று அடையாளப்படுத்த விரும்புவதில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார். “நான் வெற்றி பெறுவேன். நான் ஏன் கிங்மேக்கராக இருக்க வேண்டும்? கூட்டமாக வரும் மக்களைப் பார்த்தீர்களா?” என்று விஜய் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தனது ரசிகர்களை கட்சித் தொண்டர்களாக மாற்றுவதே விஜய்யின் செய்தியாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் அவர் வெறும் கருத்துச் சொல்வதற்காகப் போட்டியிடவில்லை, மாறாக வெற்றி பெறுவதற்காகவே களம் இறங்கியுள்ளார்.
அரசியலில் நீண்ட காலம் பயணிக்கப் போவதில் அவர் தெளிவாக இருக்கிறார் என விஜய்யுடனான நேர்காணலை தொடர்ந்த ஊடகவியலாளர்கள் NDTVக்கு தெரிவித்துள்ளார்.
