சுகாதாரத்துறையில் புதிய கூட்டணி: ஒன்றிணைந்த தொழிற்சங்கங்கள் எடுத்துள்ள அதிரடி முடிவு!
பொது சுகாதார சேவையைப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு ஒன்றிணைந்த தீர்வைப் காண்பது குறித்து, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) செயற்குழுவிற்கும் ஏனைய சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுக்கும் இடையில் உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
சுகாதாரத்துறையின் பல்வேறு பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி மருத்துவர்கள், பல் மருத்துவர்கள், தாதிகள், துணை மருத்துவப் பணியாளர்கள் மற்றும் ஏனைய சுகாதார உத்தியோகத்தர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.
இதன்போது தரநிலை வேறுபாடுகளைக் கடந்து, பொதுவான பிரச்சினைகளைத் தீர்க்க அனைத்து சுகாதாரத் தொழிற்சங்கங்களும் இனி ஒரு ‘கூட்டு அமைப்பாக’ (Single Collective) செயற்பட இணக்கம் காணப்பட்டது.
அத்துடன் சுகாதார சேவையையும், அதன் ஊழியர்களையும் பாதிக்கும் விடயங்களை கூட்டாகக் கையாள்வது என தீர்மானிக்கப்பட்டது.
மேலும் சுகாதாரத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் எண்ணிக்கையை (Cadre) உடனடியாகப் புதுப்பித்தல், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தொடர்ச்சியான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்தல்,இறக்குமதி செய்யப்படும் மருத்துவ விநியோகங்களின் தரத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
