தவறுதலாக விழுந்த புகைப்படத்தால் இணையத்தில் அதிர்ச்சி

 

தமது கையடக்கத் தொலைபேசியை காற்சட்டைப் பைக்குள் (Pocket) வைத்திருக்கும்போது தவறுதலாக புகைப்படம் எடுக்கப்படுவது சாதாரணமான ஒன்று. அவ்வாறு எடுக்கப்படும் படங்கள் பொதுவாக கருப்பாகவோ அல்லது மங்கலாகவோதான் இருக்கும்.

ஆனால், அமெரிக்கப் பெண்ணொருவரின் தொலைபேசியில் தவறுதலாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம், தற்போது இணையவாசிகளைப் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைத்தளமான ‘ரெடிட்’ (Reddit) தளத்தில் பதிவேற்றப்பட்ட அந்தப் புகைப்படம், ஏதோ விண்வெளியையோ அல்லது மர்மமான வேறொரு உலகத்தையோ படம் பிடித்தது போலத் தோன்றுவதாகவும், நீல நிறக்கோடுகளும், மின்னும் வெண்ணிற ஒளிக்கீற்றுகளும் நிறைந்த அந்தப் படம், ஐபோன் 16 (iPhone 16) கருவி மூலம் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த படம் தொடர்பில்”எனது மனைவி தவறுதலாக பொக்கட்டுக்குள் வைத்து எடுத்த படம் இது, இது எப்படிச் சாத்தியம்?” என அவரது கணவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் 50,000-க்கும் அதிகமானோரால் கவரப்பட்ட இந்தப் புகைப்படம் குறித்துப் பல்வேறு நகைச்சுவையான மற்றும் அறிவியல் ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன.

“பெண்களின் பொக்கட்டுகள் ஏதோ ஒரு மாய உலகத்திற்கான வாசல்” எனச் சிலர் வேடிக்கையாகக் கருத்துத் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் புகைப்படம் வேறொரு பரிமாணத்தை (Dimension) காட்டியதா? எனப் பலரும் விவாதித்தாலும், நிபுணர்களின் கருத்து வேறாக உள்ளது.

அறைக்குள் இருந்த தொலைக்காட்சியின் வெளிச்சம், மெல்லிய துணியின் ஊடாகப் பிரதிபலித்திருக்கலாம் அல்லது தொலைபேசி அசையும்போது ஏற்பட்ட ‘மோஷன் பிளர்’ (Motion Blur) காரணமாக இவ்வாறான ஒளிக் கோடுகள் உருவாகியிருக்கலாம் என அவர்கள் விளக்குகின்றனர்.

காரணம் எதுவாக இருந்தாலும், தவறுதலாக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இவ்வளவு அழகாகவும், மர்மமாகவும் அமைந்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளதாக கூறப்படுகிறது.