மட்டக்களப்பில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு – ஏறாவூர் பிரதேசத்திற்குட்பட்ட பன்குடாவெளி புலையவெளியில் இன்று வியாழக்கிழமை காலை சட்டவிரோத (யானை) மின்சாரம் வேலியின் மின்சார தாக்குதலுக்கு உள்ளான ஆணொருவரும் பெண்ணொருவரும் உயிரிழந்துள்ளதாக கரடியானாறு பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு பன்குடாவெளி புலையவெளியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான செல்வம் கர்ணன் (வயது-48) மற்றும் ஏறாவூர் 5ஆம் குறிச்சி வெற்றிவேல் வீதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயான தமிழ்ச்செல்வி செல்வகுமார் (வயது-43) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.
தமிழ்ச்செல்வி மற்றும் உயிழந்தவரது மனைவியான ஆறுமுகம் மணியம்மா ஆகியோர் இன்று காலை மீன் வாங்குவதற்காக புலையவெளி ஆற்றக்குச் செல்லும் வேளையில் பள்ளத்துவட்டை வயல் பகுதியில் நில மட்டத்தில் இருந்த யானை வேலிக்கு கம்பியிலிருந்த வந்த மின்சாரம் தாக்கியுள்ளது.
மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் தமிழ்ச்செல்வி ஆற்றுக்குள்ளும் இறந்தவரது மனைவி மேட்டு நிலப் பகுதியிலும் வீழ்ந்துள்ளனர்.
நீரில் வீழ்ந்தவரை காப்பாற்றுமாறு மணியம்மா ஆற்றங்கரையில் நின்ற தனது கணவரை அழைத்துள்ளார். இதன் போது கர்ணன் ஆற்றில் இறங்கிய போதும் அவரும் மின்சார தாக்குதலுக்கு இலக்காகி உள்ளார்.
உடனடியாக அயலவர்கள் மின்சார வேலிக்கு வழங்கப்பட்ட மின்சாரத்தை துண்டித்து இருவரையும் முச்சக்கரவண்டியில் வைத்தியசாலைக்கு கொண்டுவரும் வழியில் இருவாரும் உயிழந்துள்ளனர்.
சடலங்கள் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



