அந்தரத்தில் கழன்று விழுந்த சக்கரம்! – பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்திற்கு நேர்ந்த விபரீதம்

லாஸ் வேகாஸ் நகரில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸின் ‘Airbus A350-1000’ ரக விமானத்தின் சக்கரம் ஒன்று, விமானம் மேலெழும்பிய உடனேயே கழன்று விழுந்த காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.

திங்கட்கிழமை இரவு சுமார் 9:10 மணியளவில் நெவாடா மாகாணத்தின் ‘ஹாரி ரீட்’ (Harry Reid) சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது.

விமானம் உயர எழும்பத் தொடங்கியபோது, அதன் பின் வரிசை லேண்டிங் கியரில் (Landing Gear) இருந்த ஒரு சக்கரம் தனியாகப் பிரிந்து கீழே விழுவதை அவதானிக்க முடிந்தது.

சக்கரம் கழன்று விழுந்த போதிலும், விமானம் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து திட்டமிட்ட நேரத்திற்கு 27 நிமிடங்கள் முன்னதாகவே லண்டனைச் சென்றடைந்தது.

பயணிகள் எவருக்கும் காயங்களோ அல்லது உயிராபத்தோ ஏற்படவில்லை என்பது நிம்மதியளிக்கும் செய்தியாகும்.

இந்தநிலையில் “பாதுகாப்பே எமது முதன்மை நோக்கம். இந்தச் சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம்” என பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

கழன்று விழுந்த டயர் விமான நிலைய ஓடுபாதைப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

இதனால் விமான நிலைய சொத்துக்களுக்கோ அல்லது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.