
ஆள்கடத்தலுக்கு முற்றுப்புள்ளி
இலங்கையிலிருந்து ஆள்கடத்தலை ஒழிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்குமான ஐந்தாண்டு கால (2026–2030) தேசிய மூலோபாயச் செயல் திட்டம் இன்று புதன்கிழமை கொழும்பில் பிரதமர் ஹரினி அமரசூரிய முன்னிலையில் வெளியிடப்பட்டது.
பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டலில், சர்வதேச இடம்பெயர்வு அமைப்பின் (IOM) தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட ஆள்கடத்தல் எதிர்ப்பு கட்டமைப்பின் அடிப்படையில் இந்தத் திட்டம் நான்கு முக்கிய தூண்களைக் கொண்டுள்ளது.
தடுத்தல் (Prevention): ஆள்கடத்தல் நடைபெறாமல் முன்கூட்டியே தடுத்தல்.
பாதுகாப்பு (Protection): பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு மற்றும் ஆதரவு வழங்குதல்.
தண்டனை (Prosecution): குற்றவாளிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்துத் தண்டித்தல்.
கூட்டுப்பங்காண்மை (Partnership): உள்நாட்டு மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுதல்.
இந்தநிலையில் குறித்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர், ஆள்கடத்தல் என்பது ஒரு சமூகச் சவாலாகும், இதனைத் வெறும் அடையாளமாக ஆரம்பித்து வைக்காமல், நடைமுறை ரீதியாகச் செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அத்துடன் “பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுடன், அவர்களுக்குத் தேவையான மருத்துவ வசதிகள், உளவியல் ஆதரவு மற்றும் பொருளாதார வலுவூட்டல் ஆகியவற்றையும் வழங்க வேண்டும். குறிப்பாகப் பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து அரச நிறுவனங்களும் தமது அன்றாடச் செயற்பாடுகளில் ஆள்கடத்தல் தடுப்புப் பணிகளை முன்னுரிமைப்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
