
புதிய சுற்றறிக்கை வெளியீடு
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தக நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் புதிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வலுவூட்டுவதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் 2025.12.05 திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025 என்ற வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கை மூலம் அறிவிக்கப்பட்டதுடன், அந்த நிவாரண நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி, மிகவும் செயற்திறனாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காக 2025.12.20 திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025(i) என்ற சுற்றறிக்கை மற்றும் 2026.01.22 திகதியிடப்பட்ட இலக்கம் 08/2025(iii) என்ற சுற்றறிக்கை ஆகியவை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
குறித்த புதிய சுற்றறிக்கையின்படி, சமூக வலுவூட்டும் வேலைத்திட்டம் பின்வருமாறு.
பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகங்களுக்கு நிவாரணம்
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு முடங்கிப் போன வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்றவகையில் ஒரு முறை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவு
– கைத்தொழில் அமைச்சில் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகத்திற்கு 200,000/- ரூபா
– பிரதேச செயலகத்தில் வர்த்தகமாகப் பதிவு செய்யப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண் வர்த்தகத்திற்கு 200,000/- ரூபா
– நிரந்தர கட்டிடத்தில் செயற்படும் பதிவு செய்யப்படாத வர்த்தகத்திற்கு 50,000/- ரூபா
– பதிவு செய்யப்படாத உற்பத்திக் கைத்தொழில்கள் மற்றும் பசுமை இல்லங்கள் போன்றவற்றுக்கு ஒரு அலகுக்கு 50,000/- ரூபா
– நடைபாதை மற்றும் நடமாடும் தற்காலிக வர்த்தகத்திற்கு 25,000/- ரூபா வீதமும்,
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நிரந்தர வர்த்தகக் கட்டிடங்களுக்காக வர்த்தகக் கட்டிட உரிமையாளருக்கு தமது வர்த்தகத்தை மீண்டும் ஆரம்பிக்க வழங்கப்படும் கொடுப்பனவு
– சேத மதிப்பீடு இல்லாமல் இழப்பீடு பெற விருப்பம் தெரிவிக்கும் வர்த்தகக் கட்டிட உரிமையாளருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ஒரு வர்த்தக உரிமையாளருக்கு 500,000/-ரூபா மற்றும்
– சேத மதிப்பீட்டிற்குப் பிறகு இழப்பீடு பெற விருப்பம் தெரிவிக்கும் வர்த்தகக் கட்டிட உரிமையாளருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு ஒரு வர்த்தக உரிமையாளருக்கு மதிப்பிடப்பட்ட பெறுமதியின் அடிப்படையில் வழங்கப்படும் அதிகபட்சக் கொடுப்பனவு 5,000,000/- ரூபா வீதம் நிவாரணம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேற்கண்ட கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, பின்வரும் கடன் வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
இந்தக் கொடுப்பனவுகளுக்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்ட தமது வர்த்தகங்களை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையான பணி மூலதனத்திற்காக புதிய கடன் வசதியும், மேலும் முதலீடு தேவைப்படும் வர்த்தகங்களுக்கு கடன் வசதியும் திறைசேரியால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, பாதிக்கப்பட்ட வர்த்தகங்களை மீண்டும் தொடங்க 3% வட்டி விகிதத்தில் பணி மூலதனமாக ரூ. 250,000/- முதல் ரூ. 25,000,000/- வரை கடன்களைப் பெற வங்கி கட்டமைப்பு மூலம் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், கடன்களை 06 மாத கால அவகாசத்திற்கு உட்பட்டு 03 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்த வேண்டும்.
வர்த்தக மீட்பு முதலீட்டுக் கடனாக பாதிக்கப்பட்ட தொழில் முயற்சியாளர்களுக்கு, 25 மில்லியன் ரூபா வரை 5% வட்டியில் 12 மாத சலுகைக் காலத்துடன் 10 ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக் கூடிய வகையில் வங்கிகள் மூலம் கடன்களைப் பெற தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
