
கொழும்பு துறைமுகத்தில் 323 கொள்கலன்கள் விடுவிப்பு: வாராந்தம் விசாரணை நடத்த நாடாளுமன்றத் தெரிவுக்குழு தீர்மானம்!
கட்டாய உடற்பரிசோதனை இன்றி கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழு, தனது விசாரணைகளை மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யத் தீர்மானித்துள்ளது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நடைபெற்ற தெரிவுக்குழுவின் ஆரம்பக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன்படி ஒவ்வொரு புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு தெரிவுக்குழு கூடி விசாரணைகளை முன்னெடுக்கும்.
இதற்கமைய நாளை புதன்கிழமை அன்று தெரிவுக்குழு மீண்டும் கூடவுள்ளது.
விசாரணையின் முடிவுகள், முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தின் போது, எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் விசாரணைக்காக அழைக்கப்பட வேண்டிய தரப்பினர் குறித்து முதற்கட்ட ஆலோசனைகள் நடத்தப்பட்டன.
இதில் அமைச்சர்களான அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, சுனில் வட்டகல (பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள்), அர்க்கம் இலியாஸ் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்மாலி ஹேமச்சந்திர, அஜித் பி. பெரேரா, டி.வி. சானக்க, முஜிபுர் ரஹ்மான் மற்றும் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
