தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் மீட்கப்பட்ட மர்ம அதிசொகுசு வாகனம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் பூட்டப்பட்ட நிலையில் கைவிடப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை வழங்கிய தகவலின் அடிப்படையில், குறித்த வாகனம் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிவேக வீதி போக்குவரத்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த வாகனம், மேலதிக விசாரணைகளுக்காக திஹகொட பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தின் பதிவு இலக்கம் சோதனையிடப்பட்ட நிலையில், குறித்த இலக்கத்தில் இரத்தினபுரி பகுதியில் மற்றொரு வாகனம் பதிவுசெய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், வாகனத்திலிருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையின் பிரதியொன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அது பொத்துஹெர பகுதியை சேர்ந்த ஒருவருடையது எனத் தெரியவந்துள்ளது.

குறித்த வாகனம் மத்தள நோக்கிப் பயணித்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணி தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.