நகைக்கடையிலிருந்து தங்க சங்கிலியை திருடிக்கொண்டு தப்பி ஓடிய சந்தேக நபர் கைது!

-நுவரெலியா நிருபர்-

ஹட்டன் பிரதான நகரத்தில் உள்ள ஒரு நகைக் கடையில் இருந்து, 289,000 ரூபா மதிப்புள்ள தங்க சங்கிலியை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்ற சந்தேக நபர், கடந்த சனிக்கிழமை இரவு ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை ஹட்டன் நீதிவான் எஸ்.ராம்மூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்ட போது, சந்தேக நபரை இந்த மாதம் 27 திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்திற்குச் சொந்தமான, கிவ் தோட்டத்தின் மேல் பகுதியில் வசிக்கும், 42 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர், தங்கச் சங்கிலி வாங்குவதற்காக வந்தவர் போல் கடைக்குள் நுழைந்து, அங்கிருந்த பெண் ஊழியர்கள் காண்பித்த பல நகைகளைப் பார்வையிட்டு பின்னர் ஒரு சங்கிலியை பார்த்து கொண்டிருப்பது போல் எடுத்துக் கொண்ட நிலையில், திடீரென கடையிலிருந்து தப்பியோடியுனார்

தங்க சங்கிலியை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடும் பரபரப்பு சிசிடிவி காட்சியை அடிப்படையாகக் கொண்டு, ஹட்டன் தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.ஆர்.ஏ.டி. சுகததாசவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் பொகவந்தலாவ கிவ் தோட்டத்தில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் மறைந்திருந்ததாகவும், ஹட்டன் பொலிஸ் தலைமையக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், ஹட்டன் பொலிஸ் தலைமையக தலைமை பொலிஸ் பரிசோதகர் உட்பட, சோதனை நடத்தி சந்தேக நபரைக் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் தங்க நகையை எடுத்துக்கொண்டு, ஹட்டனில் இருந்து வட்டவளை வரையிலான ரயில் பாதையில் நடந்து சென்று, நவலப்பிட்டியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் 169,000 ரூபாக்கு தங்க நகையை அடகு வைத்து பணத்தைப் பெற்றுள்ளார் என விசாரணையில் தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்து போது 10,000 ரூபா மட்டுமே அவரிடம் இருந்ததாக ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.