கிண்ணியாவில் பத்தாண்டுத் திட்டம் தொடர்பான செயலமர்வு

-கிண்ணியா நிருபர்-

இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் 20 உள்ளூராட்சி மன்றங்களை தேர்வு செய்வதோடு அவற்றுக்கான 10 ஆண்டுகளுக்குரிய எதிர்கால அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை ( மாஸ்டர் பிளேன்) தயாரித்து அவற்றை பூரணப்படுத்துதல் என்ற அரசாங்கத்தின் திட்டத்திற்கு அமைய நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கிண்ணியா நகர சபை தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறிமுறைகள் பற்றி தெளிவு படுத்துவதற்கான ஒன்றுகூடலானது கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தி தலைமையில் நகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.

இச் செயலமர்வில் நகரசபை தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர், உதவி பணிப்பாளர்கள், திட்ட இணைப்பாளர், திட்ட உத்தியோகத்தர்கள் உட்பட நகர சபையின் செயலாளர், தொழில்நுட்ப உத்தியோகத்தர், பொது சுகாதார பரிசோதகர், வருமான பரிசோதகர், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் இத்திட்டத்தின் திட்டத் தயாரிப்புகளுக்கான கால அட்டவணைக்கு அமைய நகர சபையின் கௌரவ பிரதி தவிசாளர், உறுப்பினர்கள், துறை சார்ந்த நிபுணர்கள், புத்திஜீவிகள், உள்ளூர் திணைக்களத் தலைவர்கள் போன்றோர்களுடனான கலந்துரையாடல் அவ்வப்போது அட்டவணையின் பிரகாரம் நடாத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.