சிறையில் மலர்ந்த காதல் : பிணையில் வந்து திருமணம்!
இந்தியாவின், ராஜஸ்தான் மாநிலத்தில் வெவ்வேறு கொலை வழக்குகளில் ஆயுள் தண்டனை பெற்ற இருவர், சிறையில் ஏற்பட்ட காதலால் பிணையில் வெளிவந்து திருமணம் செய்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ‘டேட்டிங்’ செயலி மூலம் பழகி துஷ்யந்த் சர்மா என்பவரைக் கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வீசிய வழக்கில் நேகா பிரியா சேத் (வயது 34) என்ற பெண்ணும், அல்வார் பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவு விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை கொலை செய்த வழக்கில் அனுமார் பிரசாத் (வயது 29) என்பவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்குகளில் இவர்கள் இருவருக்கும் 2023ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
திறந்தவெளிச் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது.
இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து பிணை கோரி விண்ணப்பித்தனர்.
ராஜஸ்தான் மேல்நீதிமன்ற உத்தரவின்படி இவர்களுக்கு 15 நாட்கள் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
சிறையிலிருந்து வெளியே வந்த இருவரும், திருமணம் செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
……………………………………………………………
நேகா பிரியா சேத் (வயது 34)
ராஜஸ்தான் மாநிலத்தில் மாடலாக இருந்த நேகா என்ற பெண்ணுக்கு டேட்டிங் செயலி மூலம் துஷ்யந்த் சர்மா என்பவருடன் 2018ம் ஆண்டு தொடர்பு ஏற்பட்டது. நேகாவிற்கு ஏற்கனவே திக்ஷந்த் கம்ரா என்ற காதலன் இருந்தார். அக்காதலன் கடன் தொல்லையில் இருந்தார். அக்கடனை அடைக்க நேகா டேட்டிங் ஆப் மூலம் அறிமுகமான காதலன் சர்மாவை கடத்தி பணம் பறிக்க திட்டமிட்டார்.
இதற்காக சர்மாவை, நேகா ஆல்வார் நகரில் உள்ள தனது வீட்டிற்கு வரும்படி கேட்டுக்கொண்டார். அங்கு வந்தவுடன் சர்மாவிடம் 10 லட்சம் கொடுக்கும்படி நேகா கேட்டார். சர்மா 3 லட்சத்தை ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டார்.
ஆனால் சர்மாவை வெளியில் விட்டால் பொலிஸில் சென்று சொல்லிவிடுவார் என்று பயந்து நேகாவும், அவரது காதலனும் நினைத்தனர்.
இதையடுத்து நேகாவும், அவரது காதலனும், மற்றொருவரும் சேர்ந்து சர்மாவை கொலை செய்தனர். கொலை செய்யப்பட்ட சர்மாவை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அவரது முகத்தில் ஏராளமான கத்திக்குத்து காயங்களை ஏற்படுத்தினர்.
பின்னர் உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து மலையில் தூக்கிப்போட்டனர். சர்மாவின் உடலை மீட்ட பொலிஸார், நேகா உட்பட மூன்றுபேரையும் கைது செய்தனர். அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
…………………………………………………………………….
அனுமார் பிரசாத் (வயது 29)
ஆல்வார் நகரை சேர்ந்த ஹனுமான் என்பவர் சந்தோஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஹனுமானை விட சந்தோஷிக்கு 10 வயது அதிகம். சந்தோஷிக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருந்தன. சந்தோஷி ஒரு விளையாட்டு வீராங்கனையாவார். அவர்களது காதலுக்கு கணவன் இடையூராக இருந்தார். இதையடுத்து தனது கணவனை கொலை செய்ய முடிவு செய்த சந்தோஷி இதற்காக ஹனுமானுக்கு அழைப்பு விடுத்தார். ஹனுமான் தனது நண்பர்களுடன் வந்து சந்தோஷியின் கணவர் பன்வரிலால் என்பவரை கொலை செய்தார்.
ஆனால் சந்தோஷின் 3 பிள்ளைகள் மற்றும் வீட்டில் இருந்த ஒரு உறவினர் விழித்துவிட்டனர். அவர்கள் கொலையை பார்த்துவிட்டனர்.
இதையடுத்து தனது குழந்தைகள் மற்றும் உறவினரையும் கொலை செய்துவிடும்படி சந்தோஷி தனது காதலனிடம் கேட்டுக்கொண்டார். உடனே ஹனுமானும், அவரது நண்பர்களும் சேர்ந்து விலங்குகளை கொலை செய்வது போன்று 4 பேரையும் கொலை செய்தனர். ஹனுமானுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
