உழைத்த நிறுவனமே கைவிட்ட சோகம்

இந்தியாவில் தசாப்த காலங்களாக ஒரு எழுதப்படாத விதி இருந்தது: “20 மற்றும் 30 வயதுகளில் கடுமையாக உழைத்துத் தப்பித்துவிட்டால், 40 வயதுக்கு மேல் உங்கள் வாழ்க்கை பாதுகாப்பாக இருக்கும்.” ஆனால், அந்த நம்பிக்கை இப்போது சுக்குநூறாக உடைந்து வருகிறது.

கடந்த காலங்களில் 15 முதல் 25 வருட அனுபவம் என்பது ஒரு நிறுவனத்தின் பலமாகக் கருதப்பட்டது. ஆனால், இன்று அதே அனுபவம் நிறுவனங்களுக்கு ஒரு ‘சுமையாக’ பார்க்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சில நிறுவனங்கள் தங்களது நிர்வாகக் கட்டமைப்பை மாற்றியமைத்து வருகின்றன. மனிதர்களுக்குப் பதிலாக மென்பொருட்களும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் முகவர்களும் பணியமர்த்தப்படுகின்றன.

மேலும், ஒரு இலட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒரு மேலாளரை விட, தலா 25,000 ரூபாய் சம்பளத்தில் நான்கு இளைஞர்களை வேலைக்கு அமர்த்துவது இலாபம்” என்ற கணித ரீதியான முடிவுகளை நிறுவனங்கள் எடுக்கின்றன. இதனால், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் மாற்றங்களுக்கு வளைந்து கொடுக்க மாட்டார்கள் என்ற தவறான கண்ணோட்டம் நிறுவனங்கள் மத்தியில் நிலவுகிறன.

40 வயதில் வேலை இழப்பது என்பது வெறும் வருமான இழப்பு மட்டுமல்ல, அது ஒரு குடும்பத்தின் பாரிய சவாலாக அமைகிறது. பிள்ளைகளின் கல்விச் செலவு, வீட்டுக்கடன் மற்றும் முதியோருக்கான மருத்துவச் செலவுகள் எனப் பல சுமைகள் இருக்கும் நிலையில், திடீர் வேலை இழப்பு பணியாளர்களை நிலைகுலையச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும், 15 வருடங்கள் உண்மையாக உழைத்த நிறுவனங்களில் இருந்து, எவ்வித முன்னறிவிப்புமின்றி, ஒரே நாளில் பதவி விலகுமாறு (Resign) வற்புறுத்தப்படுவதாகப் பல பணியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதனால், 2025 ஒக்டோபர் மாதத்திற்குள் உலகளவில் சுமார் 1,00,000 தொழில்நுட்பத் துறை வேலைகள் பறிபோயுள்ளதாகவும், இந்தியாவில் மூத்த பணியாளர்களின் வேலைவாய்ப்பு பங்களிப்பு கடந்த பத்து ஆண்டுகளில் 39 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.