அக்கரைப்பற்று தள வைத்தியசாலைக்கு புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் நியமனம்

 

அக்கரைப்பற்று தள வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ஏ.பி.மசூத் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி அனில் ஜயசிங்கவினால் இன்று வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.எம். ஜவாஹிருக்கு எதிராக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தொழிற் சங்கமொன்றின் அழுத்தங்களுக்காக, அரச உத்தியோகத்தர் ஒருவரை இடமாற்றம் செய்ய முடியாது என்று, சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த நிலையில் இந்த நியமனம் இடம்பெற்றதுள்ளது.

இதன் காரணமாக கிழக்கு மாகாண வைத்திய அதிகாரிகள் சங்க பணிப் புறக்கணிப்பு நிறைவுக்கு வந்துள்ளது.