சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் வெளிநாட்டு பிரஜை உட்பட ஐவர் மீது குளவிக்கொட்டு

-மஸ்கெலியா நிருபர்-

5 பேர் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில், கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில், நல்லதண்ணி வழியாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் இடம் பெற்றுள்ளது, என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த 80 வயது உடைய நபர் ஒருவர், வஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 60, 49, 26 வயதுகளையுடைய மூவர் மற்றும் ஹட்டன் கிட்டியேகம பகுதியை சேர்ந்த 25 வயது நபர் என ஐவர் இவ்வாறு குளவிக்கொட்டுக்கு ஆளாகியுள்ளனர்

இவர்கள் ஐவரும், சிவனொளிபாத மலைக்கு சென்று திரும்பும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது

அதனைத் தொடர்ந்து, நல்லதண்ணி பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, குளவி கொட்டுக்கு இலக்கான ஐவரையும் அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.