பாடசாலை மாணவர்களுக்கு ஆபாசக் காணொளி காட்டிய நபர் கைது!

-நுவரெலியா நிருபர்-

பாடசாலை மாணவர்களுக்கு பல சந்தர்ப்பங்களில் ஆபாச காணொளிகளை காண்பித்த குற்றச்சாட்டில், நேற்று செவ்வாய்க்கிழமை சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக, நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை செல்லும் 11-14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, சந்தேக நபர் ஆபாச காணொளிகளை காண்பித்ததாக, நானுஓயா பகுதியில் உள்ள பல பாடசாலை மாணவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாணவிகளான சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்த பொலிஸார், கைது செய்யப்பட்ட நானுஓயா பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபரை, இன்று புதன்கிழமை, நுவரெலியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, தெரிவித்துள்ளனர்.

நானுஓயா பொலிஸ் மகளிர் பணியகத்தின் பொறுப்பதிகாரி பி.எஸ். சஞ்சீவனி (2435) மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இணைந்து, நானுஓயா பகுதி மக்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

இதன் போதே இவ்வாறான முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

இவ்வாறு நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்த 06 மாணவிகள், சட்ட வைத்திய அறிக்கையைப் பெறுவதற்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் (JMO) பரிசோதனைக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

நானுஓயா பொலிஸ் நிலையத்தின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.