அனைத்து பாடசாலைகளும் மீண்டும் ஆரம்பம்!

இலங்கையில் உள்ள அனைத்து, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2026 ஆம் கல்வியாண்டுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று புதன்கிழமை ஆரம்பமாகின்றன.

உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அனைத்துப் பாடசாலைகளும் மீண்டும் திறக்கப்படுவதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

‘டிட்வா’ சூறாவளி காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஒரு சில பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை கல்வி அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அதற்கமைய, தரம் 6 மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுகின்றன.

எனினும், முதலாம் தரத்திற்குப் புதிதாக இணைந்து கொள்ளும் மாணவர்களுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29 ஆம் ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முன்னதாக பாடசாலை நேரத்தை நீடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், தற்போதைய சூழலைக் கருத்திற்கொண்டு வழமையான நேரமான காலை 7:30 முதல் பிற்பகல் 1:30 வரை பாடசாலைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது