
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் – கஸ்ஸப தேரர் உள்ளிட்டவர்களுக்கு விளக்கமறியல்
மூதூர் நிருபர்
திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலை மற்றும் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பிலான வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்களை எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் குறித்த வழக்கானது விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார்.
குறித்த வழக்கானது இன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் பிணைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது.
குறித்த வழக்கானது மீண்டும் மதியமளவில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது எதிராளிகள் தரப்பில் குறித்த இடம் விகாரைக்குரியது எனவும், குறித்த கட்டுமானம் நிரந்தர கட்டுமானம் இல்லை.
நான்கு தூண்களை வைத்து கூரை போட்டு மேசையின் மீது புத்தர்சிலை வைக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் இது சட்டவிரோத கட்டுமானம் இல்லை எனவும் பொய்யான வழக்கு ஒன்றை பொலிஸாரும், கடலோர பாதுகாப்பு திணைக்களத்தினரும் தாக்கல் செய்திருப்பதாகவும் நீண்ட நேரமாக விவாதம் இடம்பெற்றது.
அத்துடன் குறித்த வழக்கில் பிணை வழங்க வேண்டுமாயின் குறித்த சட்டவிரோத கட்டுமானங்களை அகற்றிவிட்டு வந்தால் குற்றப்பிரிவுகளில் மாற்றம் செய்து பிணை வழங்க முடியும் அல்லது குற்றத்தை ஒப்புக் கொண்டால் பிணை வழங்க முடியும் எனவும் தெரிவித்து குற்றவாளிகளுக்கு எதிர்வரும் 28ஆம் திகதிவரை விளக்கமறியலை நீடித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
குறித்த வழக்கிற்காக சரத் வீரசேகர, முன்னாள் ஆளுநர் அனுராத ஜகம்பத், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட பலர் வருகை தந்திருந்தனர்.
குறித்த வழக்கானது கடந்த புதன்கிழமை (14) விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஸ்ஸப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட 9 பேரை 19ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறும், ஏனைய இருவருக்கு பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
