
கிழக்கு மாகாணம் தழுவிய பணிப்புறக்கணிப்பு – அரச மருத்துவர்கள் அதிரடி முடிவு
மருத்துவ அத்தியட்சகரின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் முறைகேடு குற்றச்சாட்டுகள் தொடர்பில் வெளிப்படையானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், குறித்த விசாரணை சுதந்திரமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு, சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்குமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கோரிக்கைகளை முன்வைத்துக் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டம், தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
எனினும், வழங்கப்பட்ட கால அவகாசத்திற்குள் சுகாதார அமைச்சு எவ்வித சாதகமான பதிலையும் வழங்காததன் காரணமாக, போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இன்று காலை 8 மணி முதல் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளிலும் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பமாகவுள்ளது.
பணிப்புறக்கணிப்பு இடம்பெற்றாலும், அவசர விபத்துகள் மற்றும் உயிராபத்து நிலையிலுள்ள நோயாளர்களுக்கான அவசர சிகிச்சை சேவைகள் மனிதாபிமான அடிப்படையில் எவ்வித தடையுமின்றி முன்னெடுக்கப்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.
