துணிந்தெழு சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவு விழா
-அம்பாறை நிருபர்-
ஸ்கை தமிழ் ஊடகத்தின் கீழ் இயங்கும் துணிந்தெழு சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட “துணிந்தெழு சங்கமம்” விசேட விழா இன்று சனிக்கிழமை கல்முனையில் நடைபெற்றது.
துணிந்தெழு சஞ்சிகையின் வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய உறுப்பினர்களைக் கௌரவிக்கும் விதமாக “துணிந்தெழு விருது” வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன், அண்மையில் சஞ்சிகையினால் முன்னெடுக்கப்பட்ட கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற இளங்கவிஞர்களுக்கு சான்றிதழ்களும் கௌரவங்களும் இதன்போது வழங்கப்பட்டன.
இவ்விழாவின் விசேட சிறப்பம்சமாக, பெனாஷில் ஷிப்னா எழுதிய “மௌன மொழிகள்”, மஸாஹிரா கனி எழுதிய “வேரெழுது”, ஜவ்ஸன் அஹமட் எழுதிய “புதுக் கனவுகள்”, ஹப்ஸா பஹுமீர் எழுதிய “தப்பிப் பிழைத்த எண்ணங்கள்” ஆகிய நூல்கள் அதிதிகளினால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன. இந்த நூல் அறிமுகங்களைத் தொடர்ந்து, துணிந்தெழு சஞ்சிகையின் 5ஆம் ஆண்டு நிறைவு விசேட பிரதியும் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டது.
நிகழ்வின் பிரதம அதிதியாக கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவர் ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்துகொண்டார்.
கௌரவ அதிதிகளாக அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வேடமுல்ல ஏ.எஸ்.பி.சி., சமூக நல செயற்பாட்டாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ காதர், தேசக்தி லங்கா பயிற்சி நிலையத்தின் தலைவர் ஜே.எம். ஹேமந்தி ஜயசுந்தர, தவிசாளர் புத்தி பிரதீப் நயதந்துபொல, மகப்பேறு நிபுணர் டாக்டர் எச்.எம். ரஸீன் முஹம்மட், சரிகமப புகழ் பாடகர் சுகிர்தராஜா சபேசன், வியூகம் தொலைக்காட்சி பணிப்பாளர் ஜனூஸ் சம்சுதீன், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் எஸ். நலீம் , அதிபர் எம்.சி. ரிப்கா அன்சார் மற்றும் கலைஞர் திருமதி ஜெனிதா மோகன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இலக்கிய ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகத்தின் பல்துறைச் சார்ந்த பிரமுகர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்ட இந்நிழ்வு, அம்பாறை மாவட்டத்தில் ஒரு உன்னத இலக்கிய விழாவாக அமைந்தது.
