
சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் பீடி தொகையுடன் சந்தேகநபர் ஒருவரை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இதன்போது பொலிஸார் கைப்பற்றிய குறித்த சிகரெட் மற்றும் பீடி தொகையின் பெறுமதி இருபது இலட்சத்து முப்பத்தெட்டாயிரம் ரூபாவிற்கும் அதிகம் என விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேகநபர் இன்று சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் மத்துகம, வலல்லாவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய மோட்டார் வாகன திருத்துநர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அவர் இன்று அதிகாலை 12.40 மணியளவில் இந்தியாவின் சென்னை நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
சந்தேகநபர் கொண்டு வந்த நான்கு பயணப் பொதிகளுக்குள் விளையாட்டுப் பொருட்கள், சேலைகள், சட்டைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு இடையில் மறைத்து வைத்து, வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகள் 12,000 அடங்கிய 60 சிகரெட் கார்ட்டூன்கள் மற்றும் இந்தியத் தயாரிப்பு பீடிகள் 23,800 அடங்கிய 19 பீடி பண்டல்களைக் கொண்டு வந்துள்ளமை சோதனைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வரும் 21 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
