
அவசரமாகப் பூமிக்குத் திரும்புகிறது SpaceX விண்கலம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட தீவிர உடல்நலக் குறைவு காரணமாக, அங்கிருந்த நான்கு விண்வெளி வீரர்களும் நேற்றையதினம் அவசரமாகப் பூமிக்குத் திரும்பியுள்ளனர்.
SpaceX நிறுவனத்தின் ‘எண்டெவர்’ (Endeavor) விண்கலம் மூலம் அமெரிக்காவின் இருவர், ஜப்பான் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த தலா ஒருவர் என நால்வர் விண்வெளி நிலையத்திலிருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 10.5 மணிநேரப் பயணத்தின் பின்னர், வியாழக்கிழமை அதிகாலை கலிபோர்னியா கடற்கரைக்கு அப்பால் பசிபிக் கடலில் விண்கலம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
விண்வெளி வீரர் ஒருவருக்கு ஏற்பட்டுள்ள “தீவிர மருத்துவ நிலை” காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எனினும், தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் இரகசியத்தன்மை கருதி பாதிக்கப்பட்ட வீரர் யார்? அல்லது என்ன நோய்? என்ற விபரங்களை நாசா (NASA) வெளியிடவில்லை.
விண்வெளி வீரர் ஒருவரின் உடல்நலக் குறைவு காரணமாக, சர்வதேச விண்வெளி நிலையத்தின் ஒரு திட்டமிடப்பட்ட பணிக் காலம் பாதியிலேயே நிறுத்தப்படுவது நாசா வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
167 நாட்கள் விண்வெளியில் கழித்த நிலையில் இவர்கள் தற்போது பூமிக்கு திரும்புவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமது உடல்நிலை குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட விண்வெளி நிலையத் தளபதி மைக் ஃபிங்கே, “நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம்.
ஆனால், முழுமையான மருத்துவப் பரிசோதனைகளை பூமியில் மேற்கொள்வதே சரியானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்த விண்வெளி வீரர் குழு (Crew-12) பெப்ரவரி நடுப்பகுதியில் விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ளது. அதுவரை, விண்வெளி நிலையத்தில் தற்போது ஒரு அமெரிக்க வீரரும் இரண்டு ரஷ்ய வீரர்களும் தங்கியிருப்பார்கள்.
