
கிண்ணியாவில் மின்சாரம் தாக்கி தரம் 8 மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு!
திருகோணமலை, கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காக்காமுனை பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா காக்காமுனை அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும், 13 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை குறித்த சிறுவன் தனது வீட்டில் மின் ஆளியை (Switch) அழுத்தியபோது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து சிறுவன் உடனடியாக மீட்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் உறவினர்களால் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து, மேலதிக பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
