
மின்சாரக் கட்டண மாற்றம் இல்லை – பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்
2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
2026 முதல் காலாண்டிற்கான கட்டணத் திருத்த முன்மொழிவை 2025 நவம்பர் 14 ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு கடந்த அக்டோபர் மாதமே அறிவுறுத்தப்பட்டது.
எனினும், மின்சார சபை தனது முன்மொழிவை 2025 டிசம்பர் 29 ஆம் திகதியே சமர்ப்பித்தது. சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவில் தவறுகள் இருந்ததால், அவற்றைச் சீர்செய்து 2026 ஜனவரி 8 ஆம் திகதிக்குள் புதிய முன்மொழிவை வழங்குமாறு ஆணைக்குழு கோரியது.
ஆனாலும், திருத்தப்பட்ட முன்மொழிவைச் சமர்ப்பிக்கத் மேலும் தாமதமாகும் என ஜனவரி 8 ஆம் திகதி மின்சார சபை அறிவித்தது.
திருத்தப்பட்ட முன்மொழிவு இன்னும் கிடைக்காத நிலையில், அது கிடைத்த பின்னர் பொதுமக்களின் கருத்துக்கேட்பு மற்றும் மீளாய்வு போன்ற பணிகளை முடிப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும். காலாண்டின் எஞ்சியிருக்கும் குறுகிய காலப்பகுதிக்காகக் கட்டணங்களை மாற்றியமைத்தால், சதவீத அடிப்படையில் கட்டணங்கள் பெருமளவு மாறுபடக்கூடும்.
இது நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்பதால் தற்போதைய கட்டணத்தை மாற்றாமல் இருக்கத் தீர்மானிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (ஏப்ரல் – ஜூன்) மின்சாரக் கட்டணத் திருத்த முன்மொழிவை 2026 பெப்ரவரி 13 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
