தனியாக வசிப்பவர்களுக்கு மட்டும் புதிய செயலி

சீனாவில் தனியாக வசிப்பவர்களைக் குறிவைத்து, “நீங்கள் இறந்துவிட்டீர்களா?” என்று கேட்கும் ஒரு மொபைல் செயலி (App) தற்போது அந்நாட்டில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.

சீன மொழியில் ‘Xileme’ என்று அழைக்கப்படும் இந்தச் செயலியின் பதிவிறக்கங்கள் மிக வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது சமூக வலைதளங்களில் காரசாரமான விவாதங்களை உருவாக்கியுள்ளது.

இதன் பிரபலம் காரணமாக, இந்தச் செயலிக்கு கட்டணம் வசூலிக்கவும், சர்வதேச பயனர்களுக்காக அதன் பெயரை மாற்றவும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தச் செயலியின் விளம்பரதாரர்களின் கூற்றுப்படி, இது மாணவர்கள் முதல் அலுவலக பணியாளர்கள் வரை தனியாக வசிப்பவர்கள் அல்லது தனிமையை விரும்புபவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய பாதுகாப்பு கருவியாகும்.

இந்தச் செயலியைப் பயன்படுத்தும் போது, ஒரு அவசர கால தொடர்பு எண்ணை (Emergency contact number) உள்ளிட வேண்டும்.

பயனர் தொடர்ந்து பல நாட்களாக செயலியில் தனது இருப்பை உறுதிப்படுத்தவில்லை என்றால், அந்த அவசர எண்ணுக்கு தானாகவே அறிவிப்புகள் அனுப்பப்படும்.

சீனாவில் சுமார் 20 கோடி மக்கள் வீடுகளில் தனியாக வசிப்பதாகக் கூறப்படுகிறது.

இது அந்நாட்டின் மொத்த குடும்பங்களில் 30 சதவீதத்திற்கும் அதிகம் என்று குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள புதிய பதிப்பில், சர்வதேச அளவில் ‘Demumu’ என்ற பெயரைப் பயன்படுத்தப்போவதாக அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது.