
பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் குறித்து புதிய அறிவித்தல்
2026 ஜனவரி 21 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை பின்வருமாறு முன்னெடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
2026 ஆம் ஆண்டில் 1 ஆம் தரத்திற்கு நடைமுறைப்படுத்த முன்மொழியப்பட்ட புதிய கல்விச் சீர்திருத்தங்களுக்கு அமைவான பாடத்திட்டத்தின் முறையான கற்றல் செயல்பாடுகள், ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களின்படி 2026 ஜனவரி 29 அன்று ஆரம்பமாகும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அதேநேரம் 6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்படவிருந்த புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது 2027 ஆம் ஆண்டு வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டில் 6 ஆம் தரம் முதல் 13 ஆம் தரம் வரை, தினசரி பாடவேளைகளின் எண்ணிக்கை எட்டாக (08) திருத்தப்பட வேண்டும்.
ஒரு பாடவேளை 40 நிமிடங்கள் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதற்கமைய, கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே முறையில் கால அட்டவணைகள் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
6 ஆம் தரத்திற்கு முந்தைய ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட அதே பாடத்திட்டமே 2026 ஆம் ஆண்டிலும் நடைமுறைப்படுத்தப்படும்.
கடந்த ஆண்டு மாணவர்கள் பயன்படுத்திய பாடப்புத்தகங்களை முதன்மையாகக் கொண்டு கற்பித்தல் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
கடந்த ஆண்டு புத்தகங்களை மாணவர்களிடமிருந்து சேகரித்து, அவற்றை மீண்டும் 6 ஆம் தர மாணவர்களுக்கு விநியோகிப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் அனைத்து அதிபர்களுக்கும் வழங்கப்படும்.
தேவையான அளவிற்கு மட்டும் புதிய பாடப்புத்தகங்கள் மிக விரைவில் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய சீர்திருத்தங்கள் தொடர்பான கற்றல் தொகுதிகள் (Module) அடிப்படையிலான முன்னோடித் திட்டம் சில மாகாணங்களில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும். அது குறித்த விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.
புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பான ஆசிரியர் பயிற்சிகள் 2026 ஆம் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பாக இதுவரை தயாரிக்கப்பட்டுள்ள கருத்துருக்கள் மற்றும் பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவை பொதுமக்களின் கலந்துரையாடலுக்காக பகிரங்கப்படுத்தப்படும்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ சுற்றறிக்கை மிக விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
