சர்ச்சைக்குரிய புத்தர் சிலை வழக்கில் பிக்குகள் உள்ளிட்ட 9 பேருக்கு விளக்கமறியல்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியில் வைக்கப்பட்ட சர்ச்சைக்குரிய புத்தர் சிலையுடன் தொடர்புடைய நான்கு பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒன்பது பேரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த வழக்கானது இன்றையதினம் நீதிபதி எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதிபதி குறித்த கட்டளையை பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கானது இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது இரு தரப்பினராலும் சமர்ப்ணங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில் சமாதானமான முறையில் குறித்த வழக்கினை முடிவுக்குக் கொண்டு வர முடியும் எனவும், அவ்வாறாயின் சட்டவிரோத கட்டுமானங்கள் அகற்றப்பட வேண்டும் எனவும், கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சார்பாக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளால் தெரிவிக்கப்பட்டபோது, எதிர் தரப்பினர் அதற்கு இணங்கிக் கொள்ளாத நிலையில், குறித்த சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கின்ற கைதுக்கு பிணை வழங்கும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்து, குறித்த எதிரிகளுக்கு பிணை வழங்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பித்திருந்தார்.

குறித்த வழக்கில் எதிரிகளாக குறிப்பிடப்பட்டிருந்த 11 பேரில், 9 பேர் இன்றையதினம் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, திருகோணமலை கல்யாண வன்ச திஸ்ஸ தேரர், பலாங்கொட கஞ்சப தேரர், திருகோணமலை சுவித வன்ச திஸ்ஸ தேரர், நந்த தேரர் ஆகிய 4 பௌத்த பிக்குகள் உட்பட சிவில் சமூகத்தினர் ஐவருமாக ஒன்பது பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலை பிரதான கடற்கரைக்கு அருகில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், 2025 நவம்பர் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கடலோர பாதுகாப்பு கட்டளை சட்டத்தை மீறி சட்ட விரோதமான முறையில், புத்தர் சிலையை வைத்து மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தியதாக, கடலோரப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 28 (01) மற்றும் 14 (01) போன்ற சட்ட விதிகளுக்கு அமைவாக, திருகோணமலை துறைமுக பொலிஸார், குற்ற பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு 17.11.2025 அன்று திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கானது, 26.11.2025 அன்று விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, எதிராளிகள் சார்பில் எவரும் முன்னிலையாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.