டிரம்பின் வரி அச்சுறுத்தல் : இலங்கையின் நிலை?

 

ஈரானுடன் வர்த்தகத் தொடர்புகளைக் கொண்டுள்ள நாடுகள், அமெரிக்காவிற்கு ஏற்றுமதிகளை செய்யும் போது 25 சதவீத மேலதிக வரியைச் செலுத்த வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது, ஏற்கனவே பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருக்கும் இலங்கைக்கு மிகப்பெரிய தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.

இலங்கையின் பிரதான ஏற்றுமதியில் ஒன்றான தேயிலையை, கொள்வனவு செய்யும் முதல் பத்து நாடுகளில் ஈரானும் ஒன்றாக உள்ளது. ஈராக், ரஷ்யா, ஐக்கிய அரபு ராஜ்ஜியம், துருக்கி, சவுதி அரேபியா, ஈரான், அசர்பைஜான், சீனா, சிரியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் இலங்கையிலிருந்து தேயிலையை கொள்வனவு செய்யும் முதல் 10 நாடுகளாக வரிசைப்படுத்தப்படுகின்றது – 2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி (tradeimex.in)

மாதாந்தம் சுமார் 9,800 மெட்ரிக் தொன் தேயிலை ஈரானுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேபோல் இலங்கை ஏற்றுமதியின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா திகழ்கின்றது.

2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி

முதலில் அமெரிக்கா-இலங்கை இடையேயான பொருளாதார உறவு பற்றி பார்க்கையில்,

இலங்கையின் மொத்த ஏற்றுமதியில் 25 சதவீத பங்கைக் கொண்டுள்ள அமெரிக்கா மூலம், ஆண்டொன்றுக்கு சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் இலங்கைக்கு கிடைப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இலங்கையிலிருந்து முதற்தரமான ஆடைகள் மற்றும் ரத்தினங்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. அத்துடன் இலங்கையிலிருந்து மசாலாப் பொருட்களும் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

அதே நேரத்தில் அமெரிக்கா, விவசாய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை இலங்கைக்கு ஏற்றுமதி செய்கிறது

அத்துடன், இலங்கையின் சுகாதாரம், விவசாயம் மற்றும் வணிகத் துறைகளுக்கு அமெரிக்கா வெளிநாட்டு உதவிகளை வழங்குகிறது. அண்மையில் நாட்டில் ஏற்பட்ட டிட்வா புயலின் பாதிப்பின் பின்னர் கூட அமெரிக்காவினால் பல கட்டங்களாக உதவிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில், அமெரிக்காவுடனான வர்த்தக தொடர்புகள் பெரும் பக்களிப்பு வழங்குகிறது, என பொருளாதார ஆய்வு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

2024 ஆம் ஆண்டு தரவுகளின்படி, இலங்கையின் மொத்த வர்த்தகம் (பொருட்கள் மற்றும் சேவைகள்) சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் என பதிவாகியுள்ளது.

இதில், இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி (ஆடைகள், ரத்தினங்கள், ஏனையவை) சுமார் 3.0 பில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதேபோல் அமெரிக்காவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி (விலங்கு தீவனம், இயந்திரங்கள், ஏனையவை) சுமார் 366.7 மில்லியன் அமெரிக்க டொலர் என பதிவாகியுள்ளது. (United States Trade Representative)

ஆகவே, அமெரிக்கா இலங்கைக்கு ஒரு முக்கிய பொருளாதார பங்காளியாகும்.

ஈரான் இலங்கை இடையேயான பொருளாதார உறவு பற்றி பார்க்கையில், 

இலங்கை ஈரானுக்கு தேயிலையை ஏற்றுமதி செய்கிறது, அதேவேளை ஈரானில் இருந்து இலங்கை எரிபொருள் இறக்குமதி செய்கிறது

அத்துடன், இலங்கையின் பாரிய அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான உமா ஓயா நீர்மின் நிலைய திட்டத்தில் ஈரானின் நிதிப் பங்களிப்பு இருக்கின்றது.

2024 ஏப்ரல் 24 அன்று, உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் இலங்கை – ஈரான் ஜனாதிபதிகளால் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டது

 

ஈரானுக்கு இலங்கை முதன்மையாக தேயிலை (மொத்தமாக மற்றும் பக்கற்றுகளில் அடைக்கப்பட்ட பொதிகள்), தென்னை நார் பொருட்கள், உலர்த்திய தேங்காய், ரப்பர் டயர்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்கிறது.

இலங்கைக்கு ஈரான், மருந்துகள், உரங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மீன் ஆகியவற்றை எற்றுமதி செய்கிறது.

இதன்படி, இலங்கையின் உட்கட்டமைப்பில், உதவி நன்கொடையாளர் மற்றும் முதலீட்டாளராக ஈரான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.

2021 ஆண்டு டிசம்பரில் கைச்சாத்திடப்பட்ட பண்டமாற்று வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 2024 ஆம் ஆண்டில் 251 மில்லியன் அமெரிக்க டொலர் எண்ணெய் கடன்களை ஓரளவு தீர்க்க, ஈரானுக்கு 20 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள தேயிலையை இலங்கை ஏற்றுமதி செய்தது. இது வெளிநாட்டு நாணய இருப்புக்கள் குறையாமல் கடன்களை தீர்க்க ஓரளவு வழிவகுத்ததாக, பொருளாதார தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. (The Diplomat)

மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி, ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்தார். இது 15 வருடங்களுக்கு பிறகு ஈரான் நாட்டு தலைவர் ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்த முக்கிய நிகழ்வாகும்.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி தனது இலங்கை விஜயத்தின் போது, ​​இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பொருளாதாரம், வர்த்தகம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலை, ஊடகம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டமை குறிப்பிடத்தக்கது.

ஈரானும், இலங்கையும் அமெரிக்க வரி அச்சுறுத்தல்களை எவ்வாறு எதிர்கொள்ள போகின்றன?

தற்போது இரு நாடுகளும் டொலர் சார்புநிலையை குறைக்க ஆசிய நாணயக் கொடுப்பனவுகளை ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகின்றது.

அமெரிக்க தடைகளை தவிர்ப்பதற்கு, டொலர் முறையைத் தவிர்த்து ஆசிய நாணயங்களை, அதாவது “இந்திய ரூபாய்” அல்லது “சீன யுவான்” போன்றவை வர்த்தகத்திற்கு ஏன் பயன்படுத்தக்கூடாது என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது!

பரந்த புவிசார் அரசியல் அழுத்தங்கள் இருந்த போதிலும், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான டன் தேயிலையை, ஈரான் இலங்கையிலிருந்து இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறது. இலங்கை தேயிலைக்கு ஈரான் ஒரு முக்கியமான சந்தையாக உள்ளது.

அத்துடன், ஏற்கனவே இலங்கை பொருட்கள் மீது 20 சதவீத வரி அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மேலதிக 25 சதவீத வரி அமுல்படுத்தப்பட்டால் அமெரிக்க நுகர்வோருக்கு இலங்கை பொருட்களின் விலை கணிசமாக உயரும்.

இது இலங்கையின் ஏற்றுமதி வருவாயைக் குறைப்பதோடு, உலக சந்தையில் இலங்கை பொருட்களின் போட்டித்தன்மையையும் பாதிக்கும் என பொருளாதார ஆய்வுகள் எச்சரிக்கின்றன. (Minnal24News)