சொஹாரா புஹாரியின் பதவி நீக்கத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை நீக்கக் கோரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியிட்ட கடிதத்தை செயல்படுத்துவதைத் தடுத்து, கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாநகர சபையில், தேசிய மக்கள் சக்தியின் பாதீட்டு முன்மொழிவை எதிர்க்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பீடம் அறிவித்திருந்தது.

எனினும், அந்த உத்தரவை மீறி, பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் சொஹாரா புஹாரியின் கட்சி உறுப்பினர் பதவியை இரத்து செய்ய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தது.

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த பின்னர், கட்சியின் தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

குறித்த தடை உத்தரவு 14 நாட்களுக்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மனுவின் பிரதிவாதிகளுக்கு, முறைப்பாட்டுக்கு எதிரான நியாயப்பாடுகளை சமர்ப்பிப்பதற்கான அறிவித்தலை அனுப்புமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற கொழும்பு மாநகர சபையின் பாதீட்டுக்கான வாக்கெடுப்பின் போது ஆதரவாக வாக்களித்ததாக, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் உறுப்பினர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். அதே நாளில் தனது உறுப்பினர் பதவியை இடைநிறுத்த கட்சி நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, ஏழு நாட்களுக்குள் தனது விளக்கத்தை, சத்தியக்கடதாசி ஊடாக சமர்ப்பிக்குமாறும் பணிக்கப்பட்டிருந்ததாகவும், சொஹாரா புஹாரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தனது விளக்கக்கடிதத்தை சமர்ப்பிப்பதற்குக் கட்சி தலைமையகத்திற்குச் சென்ற போதும், அதனை ஏற்க மறுப்பு தெரிவித்ததுடன், தனது உறுப்பினர் பதவியை இரத்து செய்வதற்கான கடிதத்தை வெளியிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நியாயமான விசாரணை நடத்தாமல் தனது உறுப்பினர் பதவியைப் பறிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம், சட்டத்திற்கு முரணானது என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் கூறியுள்ளார்.

இதன் அடிப்படையில் கட்சியின் தீர்மானம் செல்லுபடியற்றது என உத்தரவிடுமாறு கோரி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின் கொழும்பு மாநாகர சபை உறுப்பினர் சொஹாரா புஹாரி, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.