ஜனாதிபதி, பிரதமர், ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு இன்று  செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அரசாங்கம் செயற்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு மற்றும் அதன் அவசியத்தை ஏற்றுக்கொள்வதாகவும், 06ஆம் வகுப்பு பாடத்திட்டம் புதிய திருத்தத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கு சுட்டிக்காட்டிய ஆசிரியர் தொழிற்சங்க பிரதிநிதிகள், புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தேசிய கல்வி ஆணைக்குழு, தேசிய கல்வி நிறுவகம், கல்வியலாளர்கள், சட்டத்தரணிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் கல்வித் துறை தொழிற்சங்க பிரதிநிதிகளைக் கொண்ட முறையான பொறிமுறையின் மேற்பார்வையின் கீழ் அந்த செயற்பாடுகளை மேற்கொள்ளவும் அவர்கள் இங்கு முன்மொழிந்தனர்.

கல்வி மறுசீரமைப்புகளை வெற்றிகரமாக்குவதற்கு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நம்பிக்கையைப் பெறுவது அத்தியாவசியமானது என்றும், சந்தேகம் அல்லது அவநம்பிக்கையுடன் மாற்றத்தை மேற்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய கல்வி மறுசீரமைப்புகளில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுமாறு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தார்.

அரசாங்கம் தொடங்கியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து இங்கு ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, முதலாம் தர மறுசீரமைப்பு செயற்பாடுகளைத் திட்டமிட்டபடி செயற்படுத்துவதாகவும், ஆனால் மொடியுல்களைத் தயாரிப்பதில் எழுந்துள்ள சிக்கல்கள், ஆசிரியர் பயிற்சியில் ஏற்படும் தாமதம் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களைத் தவிர்த்து 6ஆம் வகுப்பு பாட மறுசீரமைப்புகளை 2027 ஆம் ஆண்டில் தொடங்க எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

மறுசீரமைப்பிற்குத் தேவையான ஸ்மார்ட் போட்கள், தொலைக்காட்சிகள் மற்றும் கணனிகள் போன்ற அடிப்படை வசதிகளைப் பெற்றோரின் பணத்தில் அன்றி அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.