
அமெரிக்காவில் கொடூரமான துப்பாக்கிச்சூடு : 7 வயது சிறுவன் உட்பட 6 பேர் உயிரிழப்பு!
அமெரிக்காவின் வடகிழக்கு மிசிசிப்பி மாகாணத்தில் நிகழ்ந்த கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், 7 வயது சிறுவன் உட்பட 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தை நடத்தியவர் கொல்லப்பட்டவர்களின் நெருங்கிய உறவினர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிசிசிப்பியின் மூன்று வெவ்வேறு இடங்களில் இந்தத் துப்பாக்கிச்சூடு தாக்குதல்கள் நடந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்துத் தகவல் கிடைத்ததும் பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடங்களுக்கு விரைந்தனர், அங்கு இரத்த வெள்ளத்தில் கிடந்த 6 பேரின் உடல்களை மீட்டனர்.
இதில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவது அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் 24 வயதான டாரிக்கா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் உயிரிழந்தவர்களின் உறவினர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, சம்பவ இடத்திலேயே அவரை சுற்றிவளைத்த அதிகாரிகள், அவரைக் கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொலிஸ் அதிகாரிகள் கூறியதாவது:
“கைது செய்யப்பட்டுள்ள டாரிக்கா மீது முதல் நிலை கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது, இதற்கு முன்னதாக அவருக்கு எந்தவிதமான குற்றப் பின்னணியும் இல்லை, 7 வயது சிறுவனை கொல்லும் அளவிற்கு அவருக்கு என்ன நோக்கம் இருந்திருக்க முடியும் என்பது புரியவில்லை, காரணம் எதுவாக இருந்தாலும், தீவிர விசாரணை மூலம் அதை நாங்கள் வெளிக்கொண்டு வருவோம்” எனத் தெரிவித்துள்ளனர்.
சொத்துத் தகராறு அல்லது குடும்பப் பகை காரணமாக இந்தத் துப்பாக்கிச்சூடு நடந்ததா? என்ற கோணத்தில் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாசாரம் குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
