கொழும்பு-கண்டி பிரதான வீதியில் விபத்து : காத்தான்குடி இளைஞர் உயிரிழப்பு!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் கேகாலை 85ம் மைல்கள் அருகில் இடம்பெற்ற விபத்தில், காத்தான்குடியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொறி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டி மற்றும் அதற்கு முன்னால் பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிய வருகின்றது.

அதனைத்தொடர்ந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான குறித்த பேருந்து, அதற்கு முன்னால் பயணித்த தனியார் பேருந்துடன் மோதியுள்ளது.

இந்த விபத்தில் லொறியின் சாரதி, உதவியாளர் மற்றும் இரு பேருந்துகளிலும் பயணித்த ஐந்து பயணிகள் என மொத்தம் ஏழு பேர் காயமடைந்த நிலையில், கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.