விஜய் ரசிகர்களுக்குப் பேரதிர்ச்சி

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் சிக்கல் காரணமாக திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் திகதி வெளியாகவில்லை.

இது தொடர்பான வழக்கு விசாரணையில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரித் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நீதிபதி பி.டி.ஆஷா இன்று  வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்குத் தீர்ப்பளித்தார்.

அதன்படி, திரைப்படத்திற்கு உடனடியாகத் தணிக்கைச் சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது.

இதனையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீடு செய்தது.

இதன்படி மாலை 3.30 மணிக்குத் தொடங்கிய விசாரணையில், “தணிக்கைச் சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? இன்னும் சில நாட்கள் காத்திருக்கலாம்” எனக் குறிப்பிட்ட தலைமை நீதிபதி அமர்வு, தனி நீதிபதி வழங்கிய உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஜனவரி 21-ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை வெளியாகவிருந்த ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கும் வரை திரையரங்குகளில் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.