வெனிசுவேலாவில் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் உயிரிழந்ததாகத் தகவல்

வெனிசுவேலாவில் கடந்த சனிக்கிழமை ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைப் பதவியில் இருந்து அகற்றுவதற்காக அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 100 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தியோஸ்டாடோ கபெல்லோ (Diosdado Cabello) தெரிவித்துள்ளார்.

இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், தற்போது அமைச்சர் கபெல்லோ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் வெனிசுவேலா ராணுவம் உயிரிழந்த தனது வீரர்களில் 23 பேரின் பெயர்களைப் பட்டியலிட்டுள்ளது.

வெனிசுவேலாவில் பணியில் இருந்த தங்களது ராணுவம் மற்றும் உளவுத்துறையைச் சேர்ந்த 32 உறுப்பினர்கள் இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கியூபா அரசு அறிவித்துள்ளது.

தாக்குதலின் போது நிக்கோலஸ் மதுரோவின் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவருடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரது மனைவி சிலியா புளோரஸ் (Cilia Flores) தலையில் காயம் அடைந்துள்ளதாகவும் கபெல்லோ உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கிடையில், இடைக்கால ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் (Delcy Rodriguez), கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்காக ஒரு வார கால அரசுமுறை துக்க தினத்தை அறிவித்துள்ளார்.