விபத்துக்களைக் குறைக்க புதிய அதிரடி

நாடளாவிய ரீதியில் பாதுகாப்பான மற்றும் போதைப்பொருள் அற்ற போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், இலங்கை போக்குவரத்துச் சபையின் (SLTB) மட்டக்குளிய பணிமனையில் இன்று வியாழக்கிழமை ஒரு புதிய போதைப்பொருள் பரிசோதனைத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் (NTMI) முழுமையான பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சாரதிகள் மற்றும் நடத்துனர்களிடமிருந்து சிறுநீர் மாதிரிகளை சேகரிக்க நடமாடும் மருத்துவ ஆராய்ச்சி வாகனம் பயன்படுத்தப்பட்டது.

இந்த சோதனையின் மூலம் கஞ்சா, ஐஸ், ஹெரோயின் ஆகிய ஆபத்தான போதைப் பொருட்களைக் கண்டறிய முடியும்.

பரிசோதனைக்கான முடிவுகள் வெறும் 10 நிமிடங்களுக்குள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தினசரி ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்கும்,சாரதிகளை போதைப்பொருள் பழக்கத்திலிருந்து விடுவிப்பதற்கும் இத்திட்டம் முக்கியமானது என தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைமை மருத்துவ அதிகாரி கே.எஸ்.எம். சமரசேகர தெரிவித்தார்.

இன்று மட்டக்குளியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தை எதிர்காலத்தில் நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

மது மற்றும் போதைப்பொருள் அற்ற போக்குவரத்து சேவையை உருவாக்க இலங்கை காவல்துறை முழுமையான ஆதரவை வழங்கும் என போக்குவரத்து பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர உறுதியளித்துள்ளார்.

இலங்கை போக்குவரத்துச் சபையில் தொடங்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பு, நாட்டுக்கே ஒரு முன்மாதிரியாக அமையும் என்றும், இதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த போக்குவரத்து அமைச்சுக்கு அதிகாரிகள் தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.