அனர்த்த நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு: கோப் குழு அங்கீகாரம்!

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வெளிநாட்டு நன்கொடையாளர்களால் வழங்கப்படும் நிவாரணப் பொருட்களை விரைவாக விடுவிப்பதற்கான புதிய ஒழுங்குவிதிகளுக்கு கோப் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நேற்று  செவ்வாய்கிழமை நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்தச் சட்டமூலம் பரிசீலிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அல்லது ஏதேனும் அரச நிறுவனத்தின் பெயரில் வெளிநாடுகளிலிருந்து வரும் நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும், அவற்றை தாமதமின்றி துறைமுகங்களிலிருந்து விடுவித்து விநியோகிக்கவும் இந்த ஒழுங்குவிதிகள் வழிவகை செய்கின்றன.

போதிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் அனுமதிகள் இருந்தபோதிலும், அனர்த்த முகாமைத்துவ நிதி இதுவரை ஏன் நிறுவப்படவில்லை என்று நிதியமைச்சிடம் குழுவினர் கேள்வி எழுப்பினர்.

இந்த நிதியை ஒரு நியதிச்சட்ட நிதியாக நிறுவுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்து குழு கவலை வெளியிட்டது.

மேலும் தாமதங்கள் ஏற்பட்டால் அது பாரிய சிக்கல்களை உருவாக்கும் என எச்சரித்த குழு, இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நிதியமைச்சு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.