விமான விபத்து: சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை விசாரணை ஆரம்பம்!

நுவரெலியா, கிரிகரி ஏரியில் தரையிறங்க முயன்ற சின்னமன் எயார் (Cinnamon Air) நிறுவனத்திற்குச் சொந்தமான Cessna 208 Caravan ரக விமானம் விபத்துக்குள்ளானமை குறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை (CAASL) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இன்று புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விமானத்தில் இருந்த 2 விமானிகளும் உயிர் தப்பினர்.

அத்துடன், மூன்றாம் தரப்பினருக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் கேப்டன் தமிந்த ரம்புக்வெல்ல உறுதிப்படுத்தியுள்ளார்.

நுவரெலியாவிலிருந்து ஒரு தொகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக இந்த உள்நாட்டு விமானம் கிரிகரி ஏரிக்கு வருகை தந்துள்ள போதே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கிரிகரி ஏரியில் கடந்த பல வருடங்களாக நீர்நிலை விமான சேவைகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், இவ்வாறான விபத்து பதிவாகியுள்ளமை இதுவே முதல் முறையாகும்.

விபத்துக்குள்ளான விமானம் 2013 ஆம் ஆண்டு சின்னமன் எயார் நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்டது.

இது சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையிடம் செல்லுபடியாகும் இயக்கச் சான்றிதழ் மற்றும் விமானத் தகைமைச் சான்றிதழ்களைப் பெற்று, விதிமுறைகளுக்கு உட்பட்டே இயக்கப்பட்டு வந்துள்ளது.

துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில், அதிகார சபையின் விசேட விசாரணைக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்த விசாரணை நடவடிக்கைகளுக்கு இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் காவல்துறை இணைந்து ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.