
இலங்கை – சிங்கப்பூர் இடையிலான விமான சேவையை விரிவுபடுத்தியது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்!
இலங்கை மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையே கடந்த 52 வருடங்களாக சேவையாற்றி வரும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம், ஜூன் 1 ஆம் திகதி முதல் தனது சேவையில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது.
அதன்படி, வாரத்திற்கு மேலதிகமாக மூன்று மதிய நேர விமான சேவைகளை அந்நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையத்திலிருந்து அதிகாலை புறப்பட்டு, காலை 10.45 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடையும்.
இந்தப் புதிய மதிய நேர சேவைக்காக பரந்த உடல் கொண்ட Airbus A350-900 ரக விமானம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது போயிங் 787-10 ட்ரீம்லைனர் (Dreamliner) விமானம் தினசரி இரவு 11.30 மணிக்கு கட்டுநாயக்கவை வந்தடையும் சேவையை வழங்கி வருகின்றது.
ஜூன் 1 ஆம் திகதி ஆரம்பமான முதலாவது மதிய நேர விமானமான SQ-463, காலை 10.45 மணிக்கு 210 பயணிகள், 14 பணியாளர்கள் மற்றும் 12 மெட்ரிக் தொன் சரக்குகளுடன் கட்டுநாயக்கவை வந்தடைந்தது.
அதே நாளில் மதியம் 12.45 மணிக்கு 276 பயணிகள் மற்றும் 14 மெட்ரிக் தொன் சரக்குகளுடன் மீண்டும் சிங்கப்பூர் நோக்கிப் புறப்பட்டது.
எதிர்வரும் மே மாதம் முதல், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தினமும் இரண்டு விமான சேவைகளை (மதியம் மற்றும் இரவு) முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்பு மேலும் பலப்படுத்தப்படும் என சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் மேலாண் இயக்குநர் வசந்த குடலியனகே தெரிவித்துள்ளார்.
