
கொட்டகலை சாரதிகள் நலன்புரி சங்கத்தினால் அனர்த்த நிவாரணத்துக்கு நிதி
-மஸ்கெலியா நிருபர்-
கொட்டகலை சாரதிகள் நலன்புரி சங்கத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் “இலங்கையை மீள கட்டியெழுப்பும்” நிதியத்துக்கு தமது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் முதலாம் திகதி சங்கத்தினர் இணைந்து ஆலயத்தில் மேற்கொள்ளும் பூஜை நிகழ்வுகளுக்கு சேகரிக்கப்படும் நிதியை இம்முறை நிவாரணத்துக்கு வழங்குவதற்குத் தீர்மானித்ததாக தெரிவித்தனர்.
இவ்வாறு தமது சங்கத்தினரால் சேகரிக்கப்பட்ட ஐம்பதாயிரம் ரூபாவை இலங்கையை மீள கட்டியெழுப்பும் நிவாரண நிதியத்தின் வங்கி கணக்கிலக்கத்துக்கு வைப்புச் செய்த பின்னர் சங்கத்தின் உறுப்பினர்கள் நேற்று சனிக்கிழமை முன்தினம் புதுவருடம சித்தப்பு முதலாம் திகதி மேற்படி வங்கி ரசீதை நுவரெலியா மாவட்ட ப் பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வியிடம் அட்டன் தேசிய மக்கள் சக்தி காரியாலயத்தில் வைத்து வழங்கினர்.
இதன் போது அங்கு கருத்து தெரிவித்த கிருஷ்ணன் கலைச்செல்வி எம்.பி, இவர்களின் பங்களிப்பு மிகவும் போற்றத்தக்கது.
அன்றாடம் தமது வருமானத்தில் கிடைக்கும் ஒரு தொகையை இந்த சங்கத்தினர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர். இச்செயற்பாடானது அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதியின் மீதுமுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடுகளாகும்.
இவர்கள் நினைத்திருந்தால் தமது பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட ஒரு பகுதிக்குச்சென்று அங்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கியிருக்கலாம். ஆனால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் இந்த உதவி ஏதாவதொரு வகையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளனர். நிச்சயமாக அவர்களது நம்பிக்கை வீண் போகாது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவிகள் சென்றடையும். இவ்வாறான மாற்றங்களையே நாம் எதிர்பார்க்கின்றோம். எல்லோருமே ஒரு நாட்டு மக்கள். அனைவருமே ஒற்றுமையாக இருக்க வேண்டும், அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் இப்போது நாட்டு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இதை நாம் வரவேற்கிறோம். மேலும் இவ்வாறான உதவிகள் எம்மை வந்து சேரும் அதை அவதானிக்கும் பலரும் தம்மால் முடிந்த நிதியை வழங்கத் தயாராகி வருகின்றனர் என்பது முக்கியமான விடயம்.
ஆனால் எந்த உதவிகளையும் செய்யாமல் இடைத்தங்கல் முகாம்களுக்கும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கும் செல்லும் சிலர் முரண்பாடுகளை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்களின் கதைகளை இனியும் மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் தெளிவாக உள்ளார்கள் என தெரிவித்தார்.
