திருமலையில் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ள கட்டடம்!

-மூதூர் நிருபர்-

திருகோணமலை – வீரநகர் பகுதியில் உள்ள வீரநகர் அன்னை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டடம் கடலரிப்பினால் தாழிறங்கும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

வீரநகர் கடற்பகுதியில் நிலவும் அதிக அலை காரணமாக பெருமளவான கரையோரப் பகுதி கடலினுள் உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அருகில் உள்ள கட்டிடங்களும் ஆபத்தான நிலையில் உள்ளன.

அந்தவகையில் வீடு ஒன்று ஏற்கனவே தாழிறங்கி சேதமடைந்துள்ளதுடன், வீரநகர் அன்னை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க கட்டடத்தின் அத்திவாரப்பகுதிகளிலும் வெடிப்பு ஏற்பட்டு குறித்த கட்டடம் தாழிறங்கும் அபாயத்தில் காணப்படுவதாகவும், குறித்த கட்டடம் மற்றும் சேதமடைந்த வீடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கட்டடமானது சுனாமி பேரழிவுக்குப் பின்னர் தன்னார்வ தொண்டர் நிறுவனம் ஒன்றினால் கட்டப்பட்டு மீனவர்களுடைய உபகரணங்களை பாதுகாப்பதற்காகவும், மீனவர்கள் ஓய்வெடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.