
சவால்களை வெற்றிகொள்ளும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும்
அனர்த்த பாதிப்பிலிருந்து மீண்டு, புதிய நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் சவால்களை வெற்றிகொள்ளும் வலிமை கொண்ட ஆண்டாக இப்புத்தாண்டு அமைய வேண்டும்.
வேற்றுமைகளைக் கடந்து, இனம், மதம் பாராது அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்து சென்ற நாட்கள் ‘தித்வா’ புயல் அனர்த்தம் நம் அனைவருக்கும் ஒரு சோதனையான காலகட்டமாக அமைந்திருந்தது.
இந்த இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் துயரத்தில் நானும் பங்கெடுக்கிறேன்.
அதேபோல் இந்த இக்கட்டான சூழ்நிலையில் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணங்களை வழங்குவதிலும், அவர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை முன்னெடுப்பதிலும் எமது அரசு மிகத் துரித கதியில் செயல்பட்டு வருகின்றது. உங்களின் பாதுகாப்பையும் நலனையும் உறுதி செய்வதே எமது முதன்மையான நோக்கம்.
மலரவிருக்கும் இந்தப் புத்தாண்டானது நமக்குச் சவால்கள் நிறைந்ததாக இருந்தாலும், அவற்றை நாம் நம்பிக்கையுடன் எதிர்கொள்வோம்.
வேற்றுமைகளைக் கடந்து, இனம், மதம் பாராது அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இதுவாகும்.
புயல் கடந்த தேசம் போல, நம் வாழ்விலும் இன்னல்கள் நீங்கி, புதிய நம்பிக்கையுடனும் ஒற்றுமையுடனும் இந்த ஆண்டைக் கடந்து செல்வோம்.
அனர்த்தங்களின் பாதிப்பிலிருந்து மீண்டு, சவால்களை வெற்றிகொள்ளும் வலிமை கொண்ட ஆண்டாக இப்புத்தாண்டு அமைய அனைவருக்கும் எனது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன், என குறிப்பிட்டுள்ளார்.
