ஆட்டிறைச்சியுடன் நாய் இறைச்சி கலந்து விற்பனை? – பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன், நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டிறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம்முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்திலுள்ள பனை மரமொன்றில் நாயொன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்படுகின்றது.

இன்றைய தினம் புதுவருடப்பிறப்பை முன்னிட்டு ஏனைய இறைச்சி வகைகளுடன் கலப்பதற்காக இந்த நாய்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

மேலும், ரெஜிபோம் பெட்டிகள் உட்பட சந்தேகத்திற்கிடமான பொருட்களும் காணப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.