
தொடர்ச்சியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் – விசாரணைகளை ஆரம்பம்
அரச அலுவலகங்கள் மற்றும் சர்வதேச விமானம் ஒன்றிற்கு விடுக்கப்பட்ட தொடர்ச்சியான போலி வெடிகுண்டு மிரட்டல்கள் தொடர்பாக, காவல்துறையின் கணினி குற்றப்பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இணைந்து உயர்மட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.
கண்டி, பூஜாபிட்டிய மற்றும் நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பிரதேச செயலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் அடங்கிய மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி, தோஹாவிலிருந்து 245 பயணிகளுடன் வந்த கட்டார் ஏர்வேஸ் விமானத்தில் வெடிப்புச் சம்பவம் ஒன்று திட்டமிடப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) குறித்த விமானம் தனிமைப்படுத்தப்பட்டு, விசேட பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
எனினும், சோதனைகளின் முடிவில் எவ்வித வெடிபொருட்களும் கண்டறியப்படவில்லை.
இந்த போலி மிரட்டல்களை விடுத்து, பொதுமக்களிடையே தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திய நபர்களைக் கண்டறிய விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
