
அஸ்வெசும பயனாளிகள் அசௌகரியம் – அரங்கேறும் அவலம்!
அஸ்வெசும நலன்புரி நன்மைகள் திட்டத்தின் கீழ் தகவல்களைப் புதுப்பிப்பதற்காக நுவரெலியா பிரதேச செயலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள், கடும் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அஸ்வெசும திட்டத்தின் கீழ் கொடுப்பனவு பெறுபவர்கள் மற்றும் விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தமது தகவல்களைப் புதுப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகின்றது.
தவறும் பட்சத்தில் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும் என்ற அச்சத்தினால் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நுவரெலியா பிரதேச செயலகத்தின் மலசல கூடத்திற்கு அருகாமையிலும், கழிவுநீர் தேங்கி நிற்கும் கால்வாய் ஓரத்திலும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது.
முறையாகத் தூர்வாரப்படாத கால்வாயில் கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
மழையினால் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் நிலையில், பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வரிசையில் காத்திருப்பதாக கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு, இந்த சுகாதாரப் பிரச்சினைக்கு உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
