மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுங்கள்- சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின்  ஹஸ்மா (“Husma”) திட்டத்தின் கீழ், பொலன்னறுவை – அரலகன்வில பிரதேச வைத்தியசாலைக்கு 2.8 மில்லியன்  ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்பட்டன.

இந்தத் திட்டத்தின்கீழ் 5 நோயாளி கண்காணிப்பு மொனிட்டர்கள் (Patient Monitors), 1 சிரின்ஞ் பம்ப் (Syringe Pump), 1 இன்ஃபியூஷன் பம்ப் (Infusion Pump) ஆகிய முக்கிய மருத்துவக் கருவிகள் வைத்தியசாலை வசம் ஒப்படைக்கப்பட்டன:

குறித்த நிகழ்வில் உரையாற்றிய சஜித் பிரேமதாச, அரசாங்கத்தின் தற்போதைய செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார்:

இதன்படி ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் விவசாயம், கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு நிவாரணம் வழங்காவிட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி சீர்குலைந்துவிடும் என குறிப்பிட்டார்.

அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய நிவாரணங்களை அதிகாரத்துவ காரணங்களைக் கூறி அரசாங்கம் தட்டிக்கழிக்கக் கூடாது எனவும் வாக்குறுதியளித்தபடி சேதமடைந்த வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும் நாட்டை கட்டியெழுப்பும் நோக்கு இன்றி, ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதிலேயே அரசாங்கம் குறியாக இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.