
ஓட்டமாவடியில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம்
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி நலனைக் கருத்திற்கொண்டு, ஓட்டமாவடி பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.எம். ஹலால்தீன் தலைமையில், நேற்று வெள்ளிக்கிழமை பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
முஸ்லிம் ஹெல்பன் ஜெர்மனி நிறுவனத்தின் நிதி உதவியுடன், அஸீஸா பவுண்டேஷன் இந்த மனிதாபிமானப் பணியினை முன்னெடுத்திருந்தது. மாணவர்களின் கல்விச் சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடசாலைப் பைகள், அப்பியாசக் கொப்பிகள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அஸீஸா பவுண்டேஷன் பணிப்பாளர் அஷ்ஷேஹ் சாதிக் ஹசன் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபைர் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு மாணவர்களுக்கு உபகரணங்களை கையளித்தனர்.
மேலும், இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனபலரும் கலந்துகொண்டனர்.
கல்வித் துறையை ஊக்குவிக்க மனிதாபிமான அமைப்புகள் முன்னெடுக்கும் இவ்வாறான முயற்சிக்கு சமூக மட்டத்தில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
