உடுத்துறை நினைவாலயத்தில் இடம்பெற்ற ஆழிப் பேரலையின் நினைவேந்தல்

-யாழ் நிருபர்-

21 வது ஆண்டு சுனாமி நினைவேந்தல் இன்று வெள்ளிக்கிழமை காலை உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் நடைபெற்றது.

சுனாமி நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நினைவுத் தூபிக்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலமை கிராம சேவையாளர் தோமஸ் யூட் மலர் மாலை அணிவித்து அஞ்சலி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் தங்கவேல் தங்கரூபன் உட்பட அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்பின் பிரதிநிதிகள், ஆகியோர் மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் தேசிய கொடியினை மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி ஏற்றியதை தொடர்ந்து, பொது ஈகைச் சுடரினை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக தலைமை கிராமசேவகர் தோமஸ் யூட் ஏற்றிவைக்க சம நேரத்தில் சுனாமியால் காவு கொள்ளப்பட்டவர்களுக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து அஞ்சலி உரைகளை வடமராட்சி கிழக்கு தலைமை கிராம சேவகர் செபமாலை தோமஸ்யூட், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் யுகதீஸ் ஆகியோர் நிகழ்த்தினர்.

இன்றைய நினைவேந்தலில் சுனாமியால் காவுகொள்ளப்பட்டவர்களது உறவுகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், என பல நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.