
சுஸூகி ஃப்ரன்க்ஸ் கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!
புதிய சுஸூகி ஃப்ரன்க்ஸ் (Suzuki Fronx) காரின் பின் இருக்கைகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை உடனடியாக நிறுத்துமாறு அதன் உரிமையாளர்களுக்கு சுஸூகி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அவுஸ்திரேலியாவில் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன விபத்துப் பரிசோதனையின் போது (Crash Test), காரின் இருக்கைப்பட்டி (Seatbelt) செயலிழந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தினால் (ANCAP) இந்த விபத்துப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன் போது காரின் பின் இருக்கைப்பட்டியைத் தாங்கிப் பிடிக்கும் கருவி (Retractor) செயலிழந்தது.
இதனால் விபத்தின் போது இருக்கைப்பட்டி தளர்வடைந்து, பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த பொம்மை (Dummy) எவ்விதப் பாதுகாப்பும் இன்றி தூக்கி வீசப்பட்டது.
இப்பிரச்சினை சரிசெய்யப்படும் வரை பெரியவர்களோ அல்லது குழந்தைகளோ காரின் பின் இருக்கைகளில் பயணம் செய்ய வேண்டாம் என அவுஸ்திரேலிய புதிய கார் மதிப்பீட்டுத் திட்டத்தின் தலைமை நிர்வாகி கார்லா ஹூர்வெக் அறிவுறுத்தியுள்ளார்.
முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட 324 வாகனங்களை சுஸூகி நிறுவனம் மீள அழைத்துள்ளது.
மேலும் கடுமையான பிரேக் பிரயோகத்தின் போதோ அல்லது விபத்தின் போதோ இருக்கைப்பட்டி அதிகப்படியாகத் தளர்வடைவதால் பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்த பட்ஜெட் வகை SUV கார், கடந்த ஓகஸ்ட் மாதம் அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுவரை சுமார் 1,600 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த “அரிய மற்றும் பாரிய” குறைபாடு கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்ற குறைபாடுகள் ஏனைய குறைந்த விலை கார் மாடல்களிலும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாக ANCAP சுட்டிக்காட்டியுள்ளது.
